என் இனிய விவாகரத்தே 1

Divorce 1

என் இனிய விவாகரத்தே 1

1 என் இனிய விவாகரத்தே!!

தன் எதிரே நின்ற தறுதலை கணவனை வாசலை மறைத்தபடி கையில் பூஜை தட்டோடு வழி மறித்தாள் புகழினி... அழகே உருவாக நின்ற மனைவியை எரிச்சலாக பார்த்தான் ... ஊரே அவளை போல பெண் கிடைக்க பிரபா கொடுத்து வச்சிருக்கணும் என்ன அழகு என்ன அடக்கம் என்று ஊரே சொல்ல அவனுக்கு மட்டும் ஆசை முப்பது நாள், மோகம் அறுபது நாளில் தீர்ந்து போயாச்சு, இப்போது அவளை பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது .. கடித்து துப்ப தோணும், எதை செய்தாலும் குறை சொல்லி அவளை குற்றபடுத்தி அவளை அழ வைத்து பார்க்கும் சைக்கோ மனநிலை பிடித்தமானது...அவளை மனைவியாக இல்லை சாதாரண உயிராக பார்க்க கூட தோன்றுவது இல்லை ... 

விடியலில் உள்ளே நுழைந்த தன் கணவனுக்கு கதவை திறந்து விட்டவள் , கையை கட்டி கொண்டு அவன் நின்ற கோலத்தை வெறித்தாள்...கப்பென்று பெண் உபயோகம் செய்யும் வாசனை திரவிய மணம் அடித்தது ... அவன் வெள்ளை சட்டை மீது உதட்டுச்சாயம் அவள் கண்களை விட்டு தப்பவில்லை... இது இன்று இல்லை ,சில வருடமாக தொடங்கிய புது பழக்கம் .. முதலில் மறைத்தான் மழுப்பினான்.... இப்போது மறைப்பதும் இல்லை மழுப்புவதும் இல்லை ... ஆம்!! உன்னை தவிர எனக்கு பல பெண் சகவாசம் உண்டு என்று சொல்வதில் கூட அவன் ஆணவம் வெளிப்படும்.... 

அவன் தீபக் பிரபாகர‌ன் !! 

அவள் புகழினி!!

எங்க போயிட்டு வர்றீங்க ?? என்ற மனைவியை மேலும் கீழும் பார்த்தவன் 

"ஏன் , என் ட்ரைவர்கிட்ட விஷயம் கறந்து இருப்பியே.... கெஸ்ட் ஹவுஸ்தான் போனேன் , புதுசா வந்திருக்க பிஏ எல்லாத்துக்கும் அட்டெஸ்ட் பண்றா உன்ன போல இல்லை என்றான் தீபக் பிரபாகரன்!! 

"சீசீ இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்லை ... என்ற புகழினி கன்னம் தீ பற்றி எரிந்தது ... 

"என்ன கேள்வி கேட்க நீ யாருடி ___சி .... 

நான் ஆம்பளடி பத்து பேர் கூட போவேன், எவ கூட போனாலும் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல , நீ நான் தாலி கட்டி வீட்டோட வச்சிருக்கிற இந்த வீட்டுக்கு வேலைக்காரி , பொத்திக்கிட்டு கிடக்கல.... தாலியை கழட்டிட்டு உன் ஆத்தா வீடு போய் சேர் ... ஒரே வார்த்தை நீ நடத்த கெட்டவன்னு நான் சொன்னா ஊரே நம்பும் தெரியும்ல என்றவன் பேச்சில்தான் என்ன ஒரு எகத்தாளம்... நீ இல்லைன்னா எனக்கு வாழ தெரியாதா, தினமும் ஒருத்தி கூட போவேன் என்ற கணவனை கண்கள் வெட்டாது ஆற்றாமை தாங்காது பார்த்து கொண்டு நின்றாள் அவன் மனைவி புகழினி,  

மனைவி என்ற கெளரவ பட்டம் எல்லா பெண்ணுக்கும் அழகாய் வரமாய் அமைவது இல்லை சிலருக்கு சாபமாக கூட மாறிப்போகும் !!

ஐந்து வருட வாழ்க்கை இதுதான்!! ஆனால் அதை மனம் ஏற்கத்தான் மறுக்கிறது... இதற்கு விடை தான் என்ன? 

கெட்டவன் கூட திருந்தலாம் 

ஊருக்கு நல்லவன் வேஷம் போடும் இப்படி கெடு கெட்டவர்களை திருத்தவா மனைவி பட்டம்!!! 

மனம் போல வாழ்க்கை வாழும் அவன் அவளுக்கு தினம் தினம் கொடுக்கும் பட்டம் தாலி கட்டிய வேசி!! அவனுக்கு என்ன பட்டம் கொடுக்க ?? 

குடும்பம் குழந்தை சமூகம் என்றவை கேட்க போகும் வினாக்களுக்கு விடை தெரியாது அமைதியாக இந்த வாழ்க்கையை சகிக்க பழகி கொண்டவள்!! 

அடிமை படுத்துபவர்களை விட , தெரிந்தே அடிமை படுவதே மிகப்பெரிய தவறு என்று அவள் கண்டு கொள்ளும் போதே அவளுக்காக வாழ்க்கை ஆரம்பம் ஆகும் !! 

"அம்மா இன்னைக்காவது டேடியை கார்ல கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விட சொல்லேன் மகள் யாழினிக்கு ரெட்டை ஜடை போட்டு கொண்டிருந்த புகழினியை மகள் அண்ணாந்து பார்க்க , பிரபா ஆபிஸ் வேலையை சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தான் 

பிள்ளைக்கு தகப்பன் வேண்டுமே என்ற ஒரு காரணம் தான் அவள் பொறுத்து வலியை காட்டி கொள்ளாது வாழ காரணம் .. 

"உன் அப்பாகிட்ட நீயே கேளு ...

"நானா? அரண்டது குழந்தை ... 

தகப்பனை பிடிக்கும் ... ஆனால் தகப்பன் ஒருநாள் கூட அவளை தூக்கி வைத்து கொஞ்சியதும் இல்லை அவள் தூங்கும் முன் வந்ததும் இல்லை, எப்போதாவது அத்திபூத்தாற் போல வரும் தகப்பனோடு சுற்ற ஆசையோ ஆசை!! ஆனால் அவனுக்கு அதற்கு எல்லாம் ஆசையும் இல்லை, நேரமும் இல்லை ....  

உனக்கு வேணும்னா நீதான பாப்பு கேட்கணும்... என்னைத்தான் பிடிக்கல , பிள்ளையாவது பிடிச்சா அதாவது ஏங்காம வாழுமே என்று புகழினி நினைக்க ....

ம்ம் தயங்கி தயங்கி யாழி தன் தகப்பன் அருகே போய் நின்றாள்...

ப்ச் நான் நேத்து அவசரமா போயிட்டேன், நீங்களாவது கணக்கை சரி பார்த்து லோட் பண்ணி இருக்க கூடாது .. காச்மூச் என்று பிரபா போனில் கத்தி கொண்டிருந்தான் ... மித மிஞ்சிய பணம் , செருக்கு, திமிர் நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்ற குணம் கொண்டவன்... தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் எவன் என்ன கேட்பான் கேட்க முடியும் என்ற ஆம்பள முறுக்கில் வாழும் ஒருத்தன் .. 

அ...ப்...பா என்று யாழினி தகப்பன் தொடையை சுரண்ட.... அவன் கவனம் லேப்டாப்பில் தான் இருந்தது ,,. 

அப்பா என்று மகள் சத்தம் கூட்ட .... சட்டென அவன் மகளை குனிந்து பார்த்த பார்வையில் யாழி பயந்து போக 

என்ன? எரிந்து விழுந்தான் 

"இல்லை அப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு நீங்க கூட்டிட்டு போறீங்களா ?

"ஏன் உன் அம்மாவுக்கு இந்த வீட்டுல புடுங்கிற வேலையா? ஹான் 

"இல்லப்பா ஒருநாள் உங்க கார்ல கூட்டிட்டு போங்களேன்...

"ப்ச் போ தொல்லை பண்ணிக்கிட்டு" என்று பிரபா அவளை பிடித்து தள்ள 

"ஆஆஆஆஆஆஊ தடுமாறி போய் யாழி தரையில் விழுந்தாள் 

"அய்யய்யோ" என்று புகழினி மகளை வந்து தூக்கினாள் 

"அடுத்தவளை கூட்டிட்டு சுத்த உங்களுக்கு இனிக்குது சொந்த மகளை கூட்டிட்டு போக கசக்குதா? என்று ஆற்றாமையில் புகழினி வெடிக்க...லேப்டாப்பை மூடி வைத்த பிரபா... 

ஆமா அப்படியே ஆம்பள பிள்ளை பெத்து தள்ளிட்டா, உன்ன மாதிரி ஒரு மூதேவியை பெத்து விட்டிருக்க இதை தூக்கிட்டு ஊரெல்லாம் சுத்த வேற செய்யணுமா?? ஆம்பள பிள்ளை பெத்து தர முடியாத உனக்கு வாய் ஒரு கேடு போ" .... என்றவன் பேச்சில் தான் என்ன ஒரு இழிவு மனப்பான்மை 

பொம்பளைன்னு தரக்குறைவாக பேசுற சார், ஆம்பளை கூடவா போறீங்க.... டெய்லி ஒரு பொம்பளை கூடத்தான் சுகம் தேடி போறீங்க... எல்லாரும் ஆம்பளை பிள்ளை பெத்தா, உங்களை போல ஆம்பளைக்கு சுகம் கொடுக்க பொம்பள தட்டுபாடு ஆகிடும்ல ஆஆஆஆஆஆஆஆ அவள் கொத்து முடியை பிடித்து பிரபா ஆட்ட 

"அப்பா அப்பா அம்மாவை விடுங்க நான் இனி உங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டேன்... நானும் அம்மாவும் ஆட்டோவிலேயே ஸ்கூலுக்கு போயிக்கிறோம் அம்மாவை அடிக்காதீங்க" என்று யாழி தகப்பன் காலை பிடித்து கொள்ள ...

"ஊர் மரியாதைக்குதான் நீயும் இதுவும் இந்த வீட்டுல கிடக்கிறது... நான் ஆம்பள சம்பாதிக்கிறவன், எங்கேயும் போவேன் வருவேன் வான்னா வந்து படு... போன்னா கேள்வி கேட்காம போ... அதை விட்டுட்டு வியாக்கியானம் பண்ணின இனி அடி இல்லை, மிதி விழும் ஜாக்கிரதை.... தள்ளு "என்று புகழினியை பிடித்து தள்ளிவிட்டு பிரபா காரை எடுக்க தரையில் தாயும் மகளும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு கனநேரம் அப்படியே இருந்தார்கள்...

அம்மா "

"ம்ம் சொல்லு யாழி கண்ணீரை துடைத்து கொள்ள ...

"எனக்கு நீ மட்டும் போதும்மா அழாதீங்க, என்னால தான உங்களுக்குள்ள சண்டை "என்று தாய் கண்ணீரை மகள் துடைக்க ..... அவளுக்கு விம்மியது நெஞ்சு.... இவளுக்காகதான் சொல்லவொன்னா வேதனையை நெஞ்சுக்குள் போட்டு அமுக்குவது... மகள் வளருகிறாள்... இனியும் இதை இப்படியே விட கூடாது அவன் வாலை நறுக்கி ஆக வேண்டும் என்று நினைத்தவள்.... 

இத்தனை வருடம் கணவனை வெளியே விட்டு கொடுக்காது, அவன் தவறுகளை மறைத்து மூடி போட்டு வைத்தவள்.. உரியவர்களிடம் இதற்கான தீர்வை கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்து மகளை பள்ளியில் விட்ட புகழினி நேரே மாமனார் மாமியாரை தேடி அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டாள் ... 

தன் முன்னே தலைகுனிந்து உட்கார்ந்திருந்த மருமகளை தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே ...

"இதெல்லாம் ஒரு பிரச்சனையா புகழினி... உன் புருஷன் கிட்ட பக்குவமா பேசி சரி பண்ணிட வேண்டியதுதானே? என்றவர்களை தலையை தூக்கிப் பார்த்த புகழினி 

"மாமா அவர் குடிக்கிறாரு, என்ன அன்பா வச்சுக்கல என்ன அடிக்கிறார்னு நான் கம்ப்ளைன்ட் பண்ணல அதெல்லாம் நூற்றில 50 பேர் பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க... அந்த மாதிரி ஆம்பளைங்க கிட்ட பயந்துகிட்டு இருக்கிற பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க.... ஆனா உங்க மகன் நான் வீட்ல பொண்டாட்டியா இருக்கும்போது. ஊர் மேஞ்சிட்டு வர்றாருன்னு சொல்றேன்.... உங்களுக்கு புரியுதா? அசால்டாக பேசும் அவர்களை சலித்துதான் பார்த்தாள் ... 

"ஆமா ஊர்ல உலகத்துல எங்கேயுமே நடக்காதது இங்க நடந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க" என்று மாமியார் வெடுக்கென்று முகத்தைக் கோணிக் கொண்டு 

"ஊர் உலகத்தில் போய் பாரு, என்னென்ன கன்றாவி எல்லாமோ நடக்குது, என் மகன் ஏதோ கொஞ்சம் சறுக்கிட்டான்... அவனை மட்டும் குறை சொல்ற, நீ அவனுக்கு படுக்கையில குறை வச்சிருப்ப, ஆம்பள தேவைக்கு என்ன செய்வான் வேற வழி இல்லாம அப்படி இப்படி போயிருப்பான்... இத பெருசு படுத்திட்டு வந்து நிக்கிற.... 

"சீசீ என்ன பேசுறீங்க அத்தை , இதே தப்பை நான் செஞ்சா. நீங்க ஒத்துப்பீங்களா? உங்க மகன் பத்து பேர் கூட போற மாதிரி, நானும் பத்து பேர் கூட போனா உங்களால ஒத்துக்க முடியுமா? 

"ஏய்இஇஇஇஇஇ என்று மாமனார் மாமியாரும் சத்தத்தை உயர்த்த...

"உங்ககிட்ட நியாயம் கிடைக்கும்னு வந்து நின்னேன் பாருங்க. , என்ன செருப்பால அடிக்கணும் இப்படி பேசுற உங்க வயித்துல பிறந்த உங்க மகன் எப்படி நல்லவனா இருப்பான்.... இன்னைக்கு வரைக்கும் இதையெல்லாம் பொருத்து போக காரணம் எனக்கு பார்த்த மாப்பிள்ளை, படிச்சவனா பணக்காரனா எனக்கு ஜோடி பொருத்தமா இருப்பானான்னு நினைச்ச என் தாயும் தகப்பணும்,... அவன் என் மனசு கோணாம பாத்துப்பானா, நல்லவனா இருப்பானான்னு யோசிக்காம கல்யாணம் கட்டிக் கொடுத்தாங்களே அவங்க செஞ்ச தப்பு ..... மாட்டை விலை பேசி விக்கிற மாதிரி பெரிய இடம் , நல்ல குடும்பம்னு நூறு பவுணையும் போட்டு என்ன இங்க வித்திட்டாங்க... அதான் இப்படி அமைதியா நின்னுட்டு இருக்கேன் , எல்லாரும் தப்பு பண்ணிட்டு கடைசில பாடு படுறது நானும், என் மகளும்.... 

இப்ப என்னடி செய்ய சொல்ற? அஞ்சு வருஷம் கண்டும் காணாம கண்ணை மூடிக்கிட்டு வாழ்ந்தல்ல... காலம் முழுக்க வாழு.... உன் புருஷனை திருத்துறதா எங்களோட வேலை எங்ககிட்ட இருக்கிற வரைக்கும் அவன் நல்லாத்தான் இருந்தான்.. உன்கிட்ட வந்த பிறகு தான் புத்தி பேதலிச்சு போய் திரியுறான்னா, தப்பு அவன் பேர்ல இல்ல. உன் பேர்ல 

ஓஓஓஓ நான் தப்பா? நல்ல சொன்னீங்க தீர்ப்பு இனியும் அமைதியா இருக்க நான் தயார் இல்லை .... 

என்ன பண்ண முடியும் உன்னால .... போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவியா பண்ணு போ ... சட்டமே கள்ள குடித்தனம் நடத்தினா அது அவங்க இஷ்டம்னு சொல்லுது உன்னால என்ன பண்ண முடியும் .. 

இனி அவர்களோடு பேச எதுவும் இல்லை என்று புரிய புகழினி வந்த ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்.... 

ஆட்டோ சிக்னலில் நிற்க அவள் ஆட்டோ அருகே வந்து பிரபா கார் நின்றது .... புகழினி எட்டி பார்க்க உள்ளே பிரபா அவன் அருகே அவன் புது பிஏ, வெகு உரிமையாக அவன் தலையை கோதுவதும் இவன் அவள் கன்னத்தை கிள்ளுவதும் என்று குதூகலமாக இருக்க....அக்காட்சியை காண சகிக்காத புகழினி கண்ணை மூடி திறந்தாள்.... 

அம்மா உங்க வீட்டுக்கு தான போகணும் என்று ஆட்டோ ட்ரைவர் கேட்க 

இல்லை அண்ணா , வக்கீல் ஆபிஸ் போங்க என்று கண்ணை மூடி சீட்டில் தலை சாய்ந்து கொண்டாள்...

யாரோ சிலரின் இன்பத்துக்காக காலம் முழுக்க துன்பத்தை அனுபவிக்க அவள் ஒன்றும் தியாகி இல்லை ... தியாகி பட்டம் அவளுக்கு தேவையும் இல்லை ... 

கழுத்தில் கிடப்பது புனிதமான தாலி என்றால் 

அதற்கு குங்குமம் மஞ்சள் வைத்து மரியாதை கொடுக்கலாம்...  

அந்த புனித பந்தமே கழுத்தை நெறிக்கும் தூக்கு கயிறு என்று தெரிந்த பின்பு  

அதை குப்பையில் கழட்டி வீசுவதே உத்தமம் !!